டில்லி பிகானீர் ஹவுஸ் கலாசார மையத்தில் ரேஹான் வாத்ரா நடத்திய புகைப்படக் கண்காட்சியில், சமீபத்திய போராட்டங்களை மையமாகக் கொண்ட சில படங்களை அகற்றுமாறு நிர்வாகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காததை முன்வைத்து பா.ஜ. காங்கிரசை தாக்கியுள்ளது.
இந்தியா கேட் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிகானீர் ஹவுஸ் தற்போது பொதுக் கலை-கலாசார மையமாக செயல்படுகிறது. இங்கு No Idea Is Final என்ற தலைப்பில் இயற்கை, வனவிலங்குகள் உள்ளிட்ட கருப்பொருள்களை மையமாகக் கொண்ட கண்காட்சிக்கு அனுமதி கோரி ரேஹான் வாத்ரா ஜூன் 10 அன்று விண்ணப்பித்ததாகவும், ஜூன் 30 அன்று அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி தொடங்குவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அதில் சுமார் 70–75 படங்கள் டில்லியில் நடந்த போராட்டங்களை மையப்படுத்தியதாக கூறப்படுகிறது. அரசியல் தொடர்பான படங்களுக்கு அனுமதி இல்லை என்ற நிபந்தனை மீறப்பட்டதாகக் கூறி, அந்தப் படங்களை அகற்றுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன்படி 70க்கும் மேற்பட்ட படங்கள் அகற்றப்பட்டன.
இதற்கு ரேஹான் வாத்ரா, கண்காட்சிக்கான ஆவணங்களை முன்கூட்டியே சமர்ப்பித்திருந்ததாகவும், ஒரு வாரம் அமைதியாக இருந்த நிர்வாகம் தொடக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் அகற்றச் சொல்வது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஆனால் நிர்வாகம், இயற்கை, கலை, கலாசாரம், வனவிலங்குகள் தொடர்பான கண்காட்சிக்கே அனுமதி வழங்கப்பட்டதாகவும், அரசியல் பரப்புரை சார்ந்த படங்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி வாத்ரா தன் மகனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, இளைஞர்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய அரசு நசுக்க முயல்கிறது என குற்றஞ்சாட்டினார். பா.ஜ. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, விண்ணப்பத்தில் அரசியல் உள்ளடக்கம் இல்லை என உறுதி அளித்த பின்னரே அனுமதி கிடைத்ததாகவும், பின்னர் போராட்டப் படங்கள் சேர்க்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் வெளிநாட்டில் இருந்து பல விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் ராகுல், இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பது காங்கிரசில் ராகுல்-பிரியங்கா இடையிலான அதிகார மோதலை வெளிப்படுத்துகிறது எனவும் அவர் விமர்சித்தார்.





