விருதுநகர்: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதிலளித்தார்.
முதல்வர் விஜய் உறுதியாக இந்த தொகையை மக்களுக்கு வழங்குவார் என்றும், அதில் மாற்றுக் கருத்தே இல்லை என்றும் அவர் கூறினார். அரசு 150 நாட்களை கடந்துள்ள நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ரூ.2,500 தொகையை மக்கள் விரைவில் பயன் அடையும் வகையில் கொண்டு வர நடவடிக்கைகள் நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார். அதற்காக இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது உள்ளிட்ட தரவு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், தகுதியானவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பணம் தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில் செல்கிறது என்ற புகார்கள் அதிகமாக வந்துள்ளதாகவும், அந்த பிழைகளை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
முந்தைய ஆட்சியில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாததால் முழுமையான பயன் கிடைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார். தற்போதைய ஆட்சியில் மக்கள் முழுமையாக பயன் பெறும் வகையில் பணிகள் செய்யப்படுவதால் சில தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பு பணிகள் முடிந்த பிறகே உறுதியான காலக்கெடு கூற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





