சிவகாசியில் அமைச்சர் கீர்த்தனா பட்டாசு ஆலைகளுக்கு சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
பட்டாசு தொழில் வளர்ச்சிக்கும், விபத்துகளைத் தடுப்பதற்குமான முயற்சியாக சிவகாசியில் 100 ஏக்கரில் ‘பைரோ பார்க்’ அமைக்கப்படும் என அவர் கூறினார். இதன் மூலம் பட்டாசு ரசாயன மூலப்பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த முடியும்; அதனால் விபத்துகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பட்டாசு தொழிலை இயந்திரமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ‘பைரோ பார்க்’ வளாகத்தில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது பட்டாசு ஏற்றுமதி என்ற இலக்கை நிறைவேற்றும் பாதையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘பைரோ பார்க்’ எங்கு அமையும், எந்தெந்த வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதனை இரண்டு மாதங்களில் முழுமையாக அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் முதல்வர் தீவிரமாக இருப்பதாகவும், டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகளில் ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்படுவதாகவும், முந்தைய ஆட்சியில் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர் கூறினார்.





