திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்ற அரசு தரப்பில் உத்தரவு வழங்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள மாதா அமிர்தானந்தா மயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற்ற “12 ஜோதிர் லிங்க” வழிபாட்டை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை நடைபெறும் கிரிவலத்தில் முருக பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் நவம்பர் 24 அன்று தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை காண பல லட்சம் பேர் வர வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
முன்னதாக நீதிமன்ற தீர்ப்பை மதிக்காததால் கலெக்டர், போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்கும் நிலை உருவானதாக அவர் குற்றம்சாட்டினார். அந்த நிலை தற்போதைய அரசு உருவாக்காது என நம்புவதாகவும், முதல்வர் விஜய் அறநிலையத்துறைக்கு கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஹிந்துக்களும் வாக்களித்ததால்தான் நிர்மல்குமார் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார் என கூறிய அவர், அமைச்சர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் எதிர்காலத்தில் அரசியல் செய்வது சிரமமாகும் எனவும் எச்சரித்தார்.





