டில்லியில் நடைபெற உள்ள ‘இண்டி’ கூட்டணி பேரணிக்காக தமிழகத்திலிருந்து பெரிய அளவில் பங்கேற்பாளர்களை திரட்ட வேண்டும் என்ற காங்கிரஸ் மேலிட உத்தரவு, தமிழக நிர்வாகிகளிடையே அதிருப்தி மற்றும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கண்டித்து, நவம்பர் 1-ஆம் தேதி டில்லி ராம் லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 1,000 பேர் பங்கேற்க வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது 50 தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என டில்லி மேலிடம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், இதை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருப்பதாக சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ரயிலில் டிக்கெட் கிடைக்காததும், தனிப் பெட்டியை முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதி வழங்காததும் காரணமாக விமானப் பயணத்தை பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
விமான கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், 50 பேருக்கான பயணச் செலவு, ஹோட்டல் தங்குமிடம் மற்றும் உணவு செலவுகளை மாவட்ட தலைவர்களே ஏற்க வேண்டும் என்பது நியாயமல்ல எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் சில மாவட்ட தலைவர்கள் பேரணியில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்றும், டில்லியில் தொடர்ந்து போராட்டங்களுக்கு அழைப்பு வருவதால் பதவியை ஏன் ஏற்றோம் என சிலர் புலம்புவதாகவும் கூறப்படுகிறது.





