சென்னை: வெளிநாடு செல்ல முயன்ற ‘கிரானைட்’ வீரமணியின் மகள் அர்ச்சனாவை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படும் போக்சோ வழக்கில் வீரமணி (85) கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தோழி சாந்தி (61) உள்ளிட்ட மேலும் பலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மொத்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 23 கிலோ தங்க கட்டிகளை வழங்கியதாகவும், இதற்கான இடைத்தரகராக ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகன் பிரகாஷ் கண்ணையா செயல்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருவதுடன், அவர் லண்டனில் பதுங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரகாஷின் நெருங்கிய வட்டத்தில் அர்ச்சனா இருந்ததாகவும், தந்தை மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க முயன்றதாகவும் கூறப்படும் நிலையில், அவர் ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் வெளிநாடு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதற்கிடையில், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் உதவியாளர் கணேசனை மூன்று நாட்கள் காவலில் விசாரிக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.