2027 ஜனவரி 1 முதல் செல்போனில் சிம் கார்டை அகற்றினால் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகள் இயங்காது என மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதச் செயல்கள், இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், வை-பை மட்டும் வைத்து செயலிகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது கூறப்படுகிறது.
பலர் பழைய போன்களில் சிம் கார்டை கழற்றிவிட்டு, வை-பை இணைப்பை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமை இயக்கி வருகிறார்கள். புதிய விதிமுறையின்படி சாதனத்தில் சிம் இல்லையெனில் அந்த ஆப் தானாகவே முடக்கப்படும். முதன்மை போனில் சிம் வைத்துக்கொண்டு, அதே எண்ணை மற்றொரு போனில் லாகின் செய்து பயன்படுத்துபவர்களும் பாதிக்கப்படலாம்; சிம் கார்டு இருப்பது கட்டாயமாகும்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அல்லது உள்ளூரில் அடிக்கடி சிம் மாற்றிப் பயன்படுத்தும் போது, பதிவு செய்யப்பட்ட அசல் சிம்மை போனிலிருந்து அகற்றினால் ஆப் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்க ஒரு எண்ணைப் பயன்படுத்தி பின்னர் ரீசார்ஜ் செய்யாமல் சிம்மை செயலிழக்கச் செய்திருந்தால் அந்த கணக்குகள் முடக்கப்படலாம்.
கணினி/லேப்டாப்பில் நீண்ட நேரம் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் லாக் அவுட் செய்யப்படலாம். மீண்டும் லாகின் செய்ய, சிம் உள்ள போனிலிருந்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும்.
இந்த உத்தரவு வாட்ஸ்அப், டெலிகிராம் மட்டுமல்லாமல், மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அரட்டை, ஜியோசாட், ஷேர்சாட் உள்ளிட்ட முக்கிய குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடக செயலிகளுக்கும் பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பதிவு செய்யப்பட்ட சிம் இல்லாமல் வை-பை மூலம் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், மோசடி செய்பவர்கள் இந்திய எண்களைத் தவறாகப் பயன்படுத்துவது கடினமாகும் என்றும் அவர்கள் கூறினர்.





