கொல்கட்டாவில் பிறந்த இந்திய இயற்பியலாளர் அசோக் சென் (70), கோட்பாட்டு இயற்பியலில் செய்த பணிகளுக்காக சர்வதேச அளவில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது பெங்களூரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் (TIFR) கீழ் செயல்படும் சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

பொருள் மற்றும் விசைகள் உள்ளிட்ட இயற்பியலின் அடிப்படை விதிகளை ஒருங்கிணைத்து விளக்க முயலும் ஸ்ட்ரிங் தியரி துறையில், உலக அளவில் முக்கியமான ஆராய்ச்சியாளராக அவர் கருதப்படுகிறார். இந்தக் கோட்பாடு இயற்கையின் அடிப்படை அமைப்பை ஒரே கட்டமைப்பில் புரிந்துகொள்ள முயல்கிறது.

வழக்கமான இயற்பியல், எலக்ட்ரான் போன்ற அடிப்படை துகள்களை புள்ளி போன்ற அமைப்பாகக் கருதும் நிலையில், ஸ்ட்ரிங் தியரி அவை மிக நுண்ணிய சரம் போன்ற அமைப்புகளாக இருக்கலாம் என முன்வைக்கிறது. அந்த சரம் அதிரும் விதத்தைப் பொறுத்து வெவ்வேறு துகள்களின் பண்புகள் உருவாகலாம் என்பதே இதன் கருத்தாக குறிப்பிடப்படுகிறது.

இந்தத் துறையில் செய்த ஆய்வுகளுக்காக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 2026ஆம் ஆண்டுக்கான ‘ஆஸ்கர் க்ளீன்’ பதக்கம் அசோக் செனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்பியலாளர் ஆஸ்கர் க்ளீனின் பெயரில் இந்தப் பதக்கம் 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

அசோக் சென் இதற்கு முன் 2001ல் பத்மஸ்ரீ, 2012ல் அடிப்படை இயற்பியல் திருப்புமுனை விருது, 2013ல் பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.