தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி (BRS), நாட்டின் மிக அதிக சொத்து மதிப்பும் பண இருப்பும் கொண்ட பிராந்திய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக, 2025-26 நிதியாண்டுக்கான தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, கட்சியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,509 கோடி. இதில் ரூ.1,431 கோடி வங்கி வைப்புத் தொகையாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.97.76 கோடி வட்டி வருவாய் கிடைப்பதாகவும், ரூ.66.26 கோடி மதிப்புள்ள கட்டடங்கள் மற்றும் அசையா சொத்துகள், ரூ.11.17 கோடி கடன்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ல் கட்சியின் மொத்த வருமானம் ரூ.114 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நன்கொடைகள் மூலம் ரூ.16.44 கோடி கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட செலவுகள் ரூ.162 கோடியாக இருந்ததால், ரூ.48 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிக்கை சொல்கிறது. 2024-25ல் வருமானமும் செலவும் தலா ரூ.180 கோடியாக சமநிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தெலுங்கானாவில் BRS ஆட்சியில் இருந்த காலத்தில் வருமானம் கணிசமாக உயர்ந்திருந்தது என்றும் தணிக்கை விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2022-23 மற்றும் 2023-24 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக ரூ.1,423.18 கோடி வருமானம் பதிவாகி, இரு ஆண்டுகளிலும் பெரிய உபரி ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் BRS குறிப்பிடத்தக்க நிதி பெற்றதாகவும், தெலுங்கானாவில் BRS ஆட்சிக் கால பாசனத் திட்டங்களில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டி, சில திட்டங்கள் குறித்து குழுக்கள் அமைத்து விசாரணை நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




