பத்மஸ்ரீ விருது பெற்றும் கின்னஸ் உலக சாதனை படைத்தும் அறியப்பட்ட பிரபல சமையல் கலைஞர் ‘செப்’ தாமு, உடல்நலக் குறைவால் சனிக்கிழமை (அக்.25) காலை காலமானார். கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமோதரன் என்பதே அவரது இயற்பெயர். இந்தியா முழுவதும் பல்வேறு ஸ்டார் ஹோட்டல்களில் பணியாற்றிய அவர், உலகின் பல வகை உணவுகளை சமைத்து பெயர் பெற்றார். 2010-ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி 30 நிமிடம் 12 வினாடிகளில் 617 விதமான உணவுகளை தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
கல்வித் துறையிலும் அவர் தனித்த அடையாளம் பதித்தார். 2004-ல் சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. சமையல் துறைக்கான அவரது பங்களிப்பை அங்கீகரித்து மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது.
சமையலறையைத் தாண்டி தொலைக்காட்சியிலும் அவர் பரவலாக அறியப்பட்டார். சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றதுடன், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் முதன்மை நடுவராக செயல்பட்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். ‘கள்ளப்படம்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட சில படங்களிலும், ஒரு வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
செப் தாமுவின் உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




