ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனருமான பரூக் அப்துல்லா, பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் மக்களை “பாதுகாத்து வருகிறது” என கூறியதாக வெளியான பேச்சு, அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த தேசிய மாநாட்டு கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் பிரச்னை இன்னும் தீரவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உலக அரங்குகளில் தொடர்ந்து பேசுவதாக குறிப்பிட்டார். மேலும், மக்களின் குறைகளை மத்திய பா.ஜ.க. அரசு கவனிப்பதில்லை என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் எண்ணங்கள் நல்லதாக இல்லை என்றும் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும், உரிமைகளுக்காக போராடும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையெனில் மக்கள் “கூண்டோடு அழிக்கப்படுவோம்” என்றும், அடையாளம் மறைந்து விடும் என்றும் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

இதற்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் சத் சர்மா, இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருப்பதால்தான் இவ்வாறு பேச முடிகிறது என்று கூறினார். பரூக் அப்துல்லாவின் கருத்தை ஏற்க முடியாது என்றும், இந்தியாவில் வசதிகளை அனுபவித்துக்கொண்டே பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது என்றும் விமர்சித்தார். அவர் நாட்டுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் பாகிஸ்தானுக்கு குடிபெயரலாம் என்றும் தெரிவித்தார்.