கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் கள்ளநோட்டு அச்சடிப்பு நடந்ததாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். காணாமல் போனவர் தொடர்பான புகார் விசாரணை, பின்னர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் கள்ளநோட்டு சந்தேகமாக விரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கல்லேலிவயல் கிராமத்தைச் சேர்ந்த சிபியன் மாயமானதாக கூறி, அவரது மனைவி டின்சி கடந்த அக்.16 அன்று பள்ளித்தோட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்ப விசாரணையில் ஆதர்ஷ் என்பவர் சிபியனை கடத்தி, அவரிடமிருந்த தங்க நகைகளை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சில நாட்களில் சிபியன் தாமாகவே வீடு திரும்பி நடந்ததை போலீசாரிடம் கூறினார். ஆனால் அவரது விளக்கம் சந்தேகம் எழுப்பியதால், போலீசார் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில் ‘ஹவாலா’ உள்ளிட்ட சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாக கண்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிபியனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டிஜிட்டல் பிரிண்டர், ரூ.500 நோட்டு அளவில் வெட்டப்பட்ட காகித கட்டுகள், நோட்டு எண்ணும் இயந்திரம் உள்ளிட்ட கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 45 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த இடத்தில் ரூ.2.50 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் அச்சிடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆற்றிங்கலைச் சேர்ந்த ரவி என்பவரிடமிருந்து ரூ.30 லட்சத்திற்கு உபகரணங்கள் வாங்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறிய போலீசார், சிபியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




