மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுடன் இணைந்து உரையாடும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி தருவதாகக் கூறினார். விஜயதசமி நாளில் தொடங்கிய இந்தப் பயணம் 12 ஆண்டுகளாக மக்களின் ஆதரவுடன் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்திற்கு வராமல் போகும் சாதனைகள் மற்றும் முயற்சிகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவதாக மோடி தெரிவித்தார். பஞ்சாபில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்கும் “கேதி விராசத் மிஷன்” திட்டத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
இந்தியாவின் பாரம்பரியத் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், சென்னை ஐஐடி சுதா கோபாலகிருஷ்ணன் ஆய்வு மையம் உருவாக்கிய மூளை இமேஜிங் தொழில்நுட்பத் தளத்தை குறிப்பிட்டார். மேலும் பஞ்சாபின் மால்வா பகுதியில் ரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்யப்படுவதையும், இயற்கை வண்ணப் பருத்தி பயன்படுத்துவதால் வேதிப்பொருள் செயலாக்கத் தேவையை குறைக்க முடியும் என்பதையும் அவர் கூறினார்.
உறுப்பு தானத்தை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்; அது உயிர்களை காப்பாற்றவும் மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என மோடி வலியுறுத்தினார். ஆயுஷ்மான் திட்டம் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளைப் பெற உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 31-ஆம் தேதி வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் மக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டும் என்றும், உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தினசரி உணவில் சிறுதானியங்களைச் சேர்க்குமாறும் அறிவுறுத்திய பிரதமர், வரவிருக்கும் தீபாவளி மற்றும் சத் பூஜா உள்ளிட்ட பண்டிகைகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் குடும்பத்துடன் கொண்டாடி, மகிழ்ச்சியில் பிறரையும் சேர்த்துக்கொள்ளுமாறு கூறி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




