வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த அதிகனமழையால் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் பர்லியார் பகுதி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் சில பகுதிகளில் நிலச்சரிவு பதிவானது.
பர்லியாரில் ஏற்பட்ட மண்சரிவில் அரசு பஸ் புதைந்ததில் டிரைவர் உயிரிழந்தார். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வானிலை சீராகும் வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் சூழலில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசர உதவிக்காக கட்டணமில்லா 1077 உள்ளிட்ட கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர் பகுதிகளுக்கான உள்ளூர் தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சுமார் 40 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீக்ரோ பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால், குன்னூர்–மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு, ஊட்டி–குன்னூர் சேவை மட்டும் இயக்கப்பட்டது.




