மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பாஜ தலைமையிலான அரசு “மற்றொரு கடும் தாக்கை” கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அவரது அறிக்கையின்படி, அசாம், மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில் 38 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அந்த கும்பலை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ரூ.100 கோடி அளவிலான ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகவும், 1,424 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

சோதனையில் 500 டெட்டனேட்டர்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, 2029 டிசம்பர் 31க்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றும் மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது என்றும் அமித்ஷா கூறினார்.

மத்திய முகமைகள், மூன்று மாநிலங்களின் காவல்துறைகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு குழுவினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். போதை கடத்தல் கும்பல்களை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்தியா தொடர்ந்து போராடும் என்றும் அவர் கூறினார்.