சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன், புழல் ஏரியின் உபரி நீர் கால்வாய் வழித்தடத்தில் உள்ள மணலி, ஆமுல்லைவாயல், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். புயல் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று சென்னையில் அதிக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆய்வு நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை முழுவதும் 219 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன; இதில் மணலியில் மட்டும் 17 இடங்கள் உள்ளன. மண்டலம் வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் ட்ரோன் மூலம் வெள்ள பாதிப்பு கண்காணிக்கப்படும். புழல் ஏரி கொசஸ்தலை ஆற்றுடன் இணையும் சடையங்குப்பம்–இருளர் காலனி பகுதி தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது.
புழல் ஏரியில் தற்போது 17.04 அடி அளவுக்கு நீர் இருப்பதாகவும், குடிநீர் தேவைக்காக மட்டுமே நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மணலி–ஆமுல்லைவாயல் பகுதியில் உபரி கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு கால்வாய் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உபரி நீர் செல்ல மாற்றுப் பாதை உருவாக்கும் வகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் சுவர் உடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ரெட்டேரியிலிருந்து வரும் ஒரு கால்வாயும் இதே அமைப்பில் இணைவதால், புழல் மற்றும் ரெட்டேரி இரண்டின் உபரி நீரும் சீராக வெளியேற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதிகபட்சமாக இந்த உபரி கால்வாயில் 7,000 கனஅடி வரை நீர் செல்ல முடியும்; இதை மீறினால் பாலசுப்பிரமணியம் நகர், சடையங்குப்பம், இருளர் காலனி போன்ற பகுதிகளில் நீர் நிரம்பி வடியும் அபாயம் இருந்து மக்கள் பாதிக்கப்படலாம் என்றார்.
அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு இடம் பெயர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மழைநீரில் எண்ணெய் கசிவு உள்ளதா என்பதையும் தொடர்ந்து கண்காணிப்பதாகவும், உட்கட்டமைப்பு பணிகளுக்காக புதிதாக சாலை வெட்டக்கூடாது என்றும், பாதி முடிந்த சாலைகளை ஒப்படைக்க கோரி தற்காலிக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.




