சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, அதே பகுதியில் தொடர்ந்து நிலவுவதாக தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு அக்டோபர் 26 அன்று புயலாகவும், 27 அன்று தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது மிக தீவிர புயலாக மாறி, பாபட்லா–விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25 (இன்று) புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக அதிகனமழை எச்சரிக்கையாக ‘ரெட் அலெர்ட்’ வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26 அன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 27 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், அக்டோபர் 28 முதல் 31 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.