1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு, விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இந்த அணிவகுப்பு நடைபெற்று வந்தாலும், கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் சட்டப்போராட்டத்தின் மூலம் அனுமதி பெற்று அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அமைப்பு 100 ஆண்டுகளை நிறைவு செய்து 101ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதால், மாநிலம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கு அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் மாநிலச் செயலர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் 128 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியது.
அதன்படி இன்று (அக்டோபர் 25) சென்னை உட்பட பல இடங்களில் அணிவகுப்பு நடைபெறுகிறது. சென்னையில் திருவொற்றியூர், கொளத்தூர், எழும்பூர், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டை ஆகிய ஏழு இடங்களில் அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.
எழும்பூரில் ரமடா ஹோட்டல் அருகே மாலை 4.00 மணிக்கு தொடங்கும் அணிவகுப்பு, ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடையும்; அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொளத்தூர் பகுதியில் பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே மாலை 3.00 மணிக்கு அணிவகுப்பு தொடங்கும் எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது.




