ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆகம விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 24 அன்று பர்தா அணிந்த பெண் ஒருவர் கோவில் வளாகத்திற்குள் நுழைந்து கருட மண்டபம் வரை வந்து சென்றதாக தெரிவித்தார். அந்த பெண் எந்த நோக்கத்தில் கோவிலின் முக்கிய பகுதிவரை சென்றார் என்பதைக் குறித்து காவல்துறையும் கோவில் நிர்வாகமும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், நுழைவாயிலில் காவல்துறையினரும் தனியார் பாதுகாப்பு ஊழியர்களும் பணியில் இருந்த நிலையில், அந்த நபர் எந்த அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
பிற சமயத்தவர்கள் ஹிந்து கோவில்களுக்குள் நுழைவது தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழிமுறைகளை வகுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த பின்னணியில் ஸ்ரீரங்கத்தில் இத்தகைய நிகழ்வு நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.
கோவில்களுக்குள் ஹிந்து மத நம்பிக்கையும் வழிபாட்டில் ஈடுபாடும் உள்ளவர்களையே அனுமதிக்க வேண்டும் என்றும், கேரள மாநில கோவில்களில் பின்பற்றப்படுவது போல பிற சமயத்தவர்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் சட்டப்பூர்வ விதிகளை தமிழகத்திலும் அறநிலையத்துறை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




