தவெக ஆட்சி 6 மாதங்கள்கூட நீடிக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னையில் முன்னாள் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் பேசிய அவர், தவெகவிற்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் இன்றைய நிலை குறித்து புலம்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம் எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை போன்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்றும், குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் நடக்கின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ குறித்து பேசினார். அந்தப் படையைக் காப்பாற்றவே இன்னொரு படையை உருவாக்க வேண்டிய நிலை வந்துள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் நடமாட்டம் போன்ற பிரச்சினைகளில் அரசு சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேடைக்கு மேடை ‘தீய சக்தி’ என்று பேசுவதாகவும், உண்மையில் தீய சக்தி யார் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து, தாம் ‘அநியாய ஆட்சி’ என குறிப்பிட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், தவெக அரசு 6 மாதமும் நிலைக்காது என்ற தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.




