பணிசார்ந்த கோரிக்கைகளுக்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அல்லது முதல்வரின் தனிப்பிரிவுக்கு அரசு ஊழியர்கள் நேரடியாக மனு அளித்தால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் இயக்குநர் ராஜசேகர் வெளியிட்ட சுற்றறிக்கையில், துறையின் கீழ் உள்ள பல அலுவலகங்களில் பணிபுரியும் சிலர், பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக உரிய நிர்வாக வழிமுறைகளை பின்பற்றாமல், அமைச்சர்களின் அலுவலகங்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு போன்ற இடங்களுக்கு நேரடியாக விண்ணப்பித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி, சேவை தொடர்பான விஷயங்களில் சாதகமான ஆணைகள் அல்லது சலுகைகள் பெறுவதற்காக வெளி செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகளை பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது என்றும் சுற்றறிக்கை நினைவூட்டுகிறது.

எனவே, இனி எந்த கோரிக்கை அல்லது குறையையும் அலுவலகத் தலைவர் அல்லது துறைத் தலைமையின் வழியாக உரிய நிர்வாக நடைமுறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவது நடத்தை விதி 18 மீறலாக கருதப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.