வாஷிங்டன்: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் தவறினால், “ஆப்பரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் ஈரான் மீது மீண்டும் மிகப் பெரிய ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது அதே பெயரில் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டதாகவும் டிரம்ப் கூறினார்.

மேலும், “ஆப்பரேஷன் மிட்நைட் ஹேமர்” மூலம் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திறன் அழிக்கப்பட்டதாக முன்பே தெரிவித்திருந்ததை அவர் மீண்டும் குறிப்பிட்டார். போர் தீவிரம் தற்போது தணிந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நீடிப்பதாகவும், இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் மிரட்டல் விடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளோரிடாவில் நடந்த குடியரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், “மீண்டும் ஒரு சிறிய ‘எபிக் பியூரி’ தாக்குதலை நடத்தக்கூடும்; அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்” என்றார். ஆனால் தாக்குதலைத் தவிர்க்க ஈரான் என்ன செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை அவர் தெளிவாக கூறவில்லை.

இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் வளைகுடா பகுதியில் கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களை குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகளை ஈரான் குறிவைக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க துாதரங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.