உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ரவிக் குமார் திவாகர், தற்போது முசாபர்நகர் குடும்ப நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திவாகர் 2009ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச நீதித்துறையில் இளநிலை சிவில் நீதிபதியாக பணியில் சேர்ந்தவர். வணிகவியல், இளநிலைச் சட்டம் மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டங்களை பெற்றுள்ளார்.
அவர் பணியாற்றிய காலத்தில், முசாபர்நகரில் 11 வழக்குகளில் 23 பேருக்கும், அதற்கு முன்பு பரேலியில் 13 பேருக்கும் என மொத்தம் 36 பேருக்கு மரண தண்டனை விதித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் அவர் இருந்தபோது, கொலை உள்ளிட்ட 97 முக்கிய குற்றவியல் வழக்குகள் ஆகஸ்ட் 2026ல் மாவட்ட நீதிபதியின் நிர்வாக உத்தரவின் மூலம் திடீரென அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை தொடங்கிய வழக்குகளை இவ்வாறு நிர்வாக உத்தரவால் மாற்ற முடியுமா என தனது ஒரு தீர்ப்பில் கேள்வி எழுப்பிய திவாகர், குற்றவாளிகளுக்கு பயந்து வாழ்வதைவிட மரணமே மேல் எனவும் குறிப்பிட்டிருந்தார். அவருக்குப் பதிலாக ஷிவ் குமாரி விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.




