சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்ட வழக்கில், கிரானைட் தொழிலதிபர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி (61), அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63), கணேசன் (52) உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வீரமணி மீது இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு (SIT) இந்த வழக்கை விசாரித்து வருகிறது. வீரமணி மீது உள்ள இரண்டாவது போக்சோ வழக்கில், அவரை ஏற்கனவே இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததாகவும், வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு புழல் சிறை வளாகத்திலேயே அப்போது விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கணேசனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்ததாக தகவல்.
பணப்பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி SIT சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிபதி இரண்டு நாட்கள் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புழல் மத்திய சிறையில் இருந்த மூவரையும் SIT அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கு தேவையான வசதிகளை கருத்தில் கொண்டு அந்த காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரவள்ளூர் காவல் நிலையத்தில் மூவரிடமும் தனித்தனியாகவும், ஒன்றாக வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முடக்க யாருக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டது, பணப்பரிவர்த்தனைக்கு உதவியவர்கள் யார், பணம் எவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதுபோன்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது.
இதற்கிடையில், வீரமணியின் மகள் அர்ச்சனாவும் விசாரணை வளையத்தில் இருப்பதாகவும், வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல முன் காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டு சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியபோது அவர் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்த நிலையில், அவர் மயங்கி விழுந்ததாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல். இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு SIT சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.




