புதுடில்லி: வெளிநாட்டு தலைவர்கள் டில்லிக்கு வரும்போது, பிரதமர் ஹைதராபாத் இல்லத்தில் அரசு விருந்து அளிப்பது வழக்கம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் சைவம், அசைவம் என இருவகை உணவுகளும் பரிமாறப்பட்டதாகவும், அசைவம் விரும்புவோரின் தட்டின் முன் ரோஜா வைத்து பரிமாறுபவர்கள் அறிந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சமீப காலங்களில் இந்த விருந்துகளில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படுவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. பிரதமர் மோடி சைவம் என்பதாலேயே இம்மாற்றம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

இதற்கு அதிகாரிகள் தரப்பில், இந்தியாவின் பல மாநிலங்களின் சிறப்பு உணவுகளை வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தும் நோக்கில் மெனு அமைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய தோசை போன்ற தென் மாநில உணவுகள் ஒன்று அல்லது இரண்டு விருந்தில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இவ்விருந்துகளில் பங்கேற்பதில்லை எனவும் அந்த செய்தி கூறுகிறது. விருந்தை முன்பு புறக்கணித்த ராகுல் பின்னர் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க வாய்ப்பு வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், அதன் பின்னர் அவருக்கு அழைப்புகள் அனுப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றபோது இந்திய அரசை விமர்சிப்பதால், இங்கே வெளிநாட்டு தலைவர்களை சந்தித்தாலும் அரசுக்கு எதிராகவே பேசுவார் என்ற பார்வை காரணமாக அவரை அழைப்பதில்லை என அதிகாரிகள் கூறியதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.