விலைவாசி உயராமல் இருக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி நிலவரத்தை கண்காணித்து திடீர் உயர்வுகளைத் தடுக்கும் வகையில் அமைச்சர்கள் குழு செயல்படுகிறது என்று கூறினார். 2014 முதல் ஒவ்வோர் ஆண்டும் விநியோகத் தடைகள் ஏற்படாமல் இருக்கவும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது கூட அதேபோல் தீவிரமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கான உதாரணமாக அரிசி ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன், விவசாயிகளுக்கு அனுகூலமான விலை கிடைக்க தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

ரூபாயின் மதிப்பு குறித்து பேசிய அவர், ஒரு நாணயத்தை குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்ற பழைய அணுகுமுறை இப்போது இல்லை என்றும், அது இயல்பான நிலையை அடையும் என்றும் கூறினார். அதே நேரத்தில், அதிகமான ஏற்றத் தாழ்வுகள் ஏற்படாமல் இருக்க ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், எஸ்ஐஆர் தொடர்பாக உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள புகார்களை விசாரணைக்கு எடுத்துள்ளதாக கூறிய அவர், நீதிமன்றத்தில் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைத்து நியாயம் கேட்பது ஒரு வழிமுறை என்றார். அதேபோல் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக போராட்டம் நடத்துவதும் ஒரு வழி; தற்போது அதுவும் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.