சென்னை: போலீஸ் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்லும் திட்டத்தை முதல்வர் விஜய் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்.30 அன்று குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால் பின்னர் அந்த முடிவில் இருந்து முதல்வர் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் செல்லும் இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதால் கூட்டக் கட்டுப்பாட்டில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், பசும்பொன் குருபூஜை நிகழ்வில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் கூட்டம் திரளும் நிலையில், முதல்வர் வருகையால் கூட்டம் மேலும் அதிகரித்து சிறிய அசம்பாவிதம் நடந்தாலும் அது அரசியலாக்கப்படலாம் என்பதால் உயர் போலீஸ் அதிகாரிகள் பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதே ஆலோசனையை உளவுத்துறையும் வழங்கியதாகவும் அவர்கள் கூறினர். அந்த ஆலோசனையை ஏற்று முதல்வர் விஜய் பயணத்தை தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.