வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் குறைந்துள்ள நிலையில், அது இன்று ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்த அமைப்பு, சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மணிக்கு சுமார் 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த இது பின்னர் 5 கி.மீ. அளவுக்கு குறைந்ததால், அதன் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்று ‘அர்னாப்’ புயலாக உருவாகலாம். திங்கட்கிழமை தீவிர புயலாக வலுப்பெற்று, ஆந்திரா–ஒடிஷா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருந்து, சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.