தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து ‘ஒர்னாப்’ புயலாக உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு மணிக்கு சுமார் 8 கி.மீ வேகத்தில் நகர்ந்த அமைப்பு, தற்போது 15 கி.மீ வேகத்தில் நகர்வதாகவும், அதன் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மையம் விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 650 கி.மீ, காக்கிநாடாவிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ, மசூலிப்பட்டினத்திலிருந்து கிழக்கே 830 கி.மீ தொலைவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னறிவிப்பின்படி, புயல் அக்.27 அன்று தீவிர புயலாக மாறக்கூடும். மேலும் அக்.28 அன்று விசாகப்பட்டினம்–பபாத்லா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 115–125 கி.மீ வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அக்.26 அன்று கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா வட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் வட்டாரங்களில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அவை: சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி.




