திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் உதயநிதி ‘அறிக்கை அரசியல்’ மட்டுமே செய்து வருவதாகவும், களத்தில் இறங்கி செயல்படச் சொல்ல வேண்டும் என்றும் அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலின்படி, உடல்நிலை காரணங்களால் ஸ்டாலின் கட்சி சீரமைப்பு பணிக்காக ஊர் ஊராகச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் உதயநிதி களத்தில் அதிகமாக செயல்படவில்லை என்ற குறை மூத்த நிர்வாகிகளிடம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் வெற்றி வாய்ப்பு இருந்தபோதும், உதயநிதி தெருத்தெருவாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை எனவும், பிரசாரம் முடிந்த 3ம் தேதிக்குப் பிறகு அவர் வெளிப்படையாகக் காணப்படாதது அதிருப்தியை அதிகரித்ததாகவும் அந்த தகவல் குறிப்பிடுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறியதாக வெளியான தகவலில், மின்கட்டணம், விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு போன்ற பிரச்னைகளுக்கு எதிராக களத்தில் போராடாமல், கேலி-கிண்டலுடன் அறிக்கைகள் மட்டும் வந்தால் மக்கள் நம்பிக்கை பெறுவது கடினம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் ‘எடிட்’ செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் இளைஞர்களை ஈர்க்கலாம் என்ற தவறான கணக்கீடு இருப்பதாகவும், இந்த அணுகுமுறை தொடர்ந்தால் கட்சியை வளர்க்க முடியாது என சில மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினிடம் நேரடியாக தெரிவித்ததாகவும் தகவல் கூறுகிறது.