போர்கள், இயற்கை பேரிடர்கள், அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் என உலகம் பரபரப்பாக இயங்கும் நிலையில், பல நாடுகளில் தற்போது தேர்தல் சீசன் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி காங்கிரஸுக்கான இடைக்காலத் தேர்தலும் நடைபெற உள்ளது.
முக்கியமாக, மேற்காசிய நாடான இஸ்ரேலில் 2023-ல் ஹமாஸ் தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்களுக்குப் பிறகு முதல்முறையாக பார்லிமென்ட் தேர்தல் நடைபெறுகிறது. இஸ்ரேல் சட்டப்படி குடிமக்கள் நாட்டுக்குள் நேரில் வந்து தான் வாக்களிக்க வேண்டும்; தபால் ஓட்டு அல்லது வெளிநாட்டு வாக்குப்பதிவு முறை இல்லை.
இந்தத் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்களை கையாண்ட விதம் மற்றும் இஸ்ரேல் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் எடுத்த நிலைப்பாடு குறித்து மக்கள் அளிக்கும் மதிப்பீடாகவே பார்க்கப்படுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இஸ்ரேலில் 73 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், கருத்துக் கணிப்புகள் கடும் போட்டியை சுட்டிக்காட்டுகின்றன.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் ஜனவரியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு அதிபர் லா டினுபுவுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எரிபொருள் மானிய நீக்கம் உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கு சர்வதேச நிதி அமைப்புகள் பாராட்டு தெரிவித்தாலும், கடும் பணவீக்கம், உயர்ந்த எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள், பொருளாதாரச் சீர்கேடு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது; இதனால் பத்துக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அவரை எதிர்த்து களமிறங்கியுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அக்டோபர் 4-ல் நடந்த முதல் சுற்றில் யாரும் 50% வாக்குகளைத் தாண்டாததால் இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. தற்போதைய அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டா சில்வா மற்றும் வலதுசாரி செனட்டர் பிளாவியோ போல்சோனரோ இடையே போட்டி நிலவுகிறது; முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சோனரோ மீது உள்ள ஊழல் வழக்குகள் காரணமாக அவர் போட்டியிட முடியாததால் அவரது மகன் களமிறங்கியுள்ளார். ஐரோப்பிய நாடான செர்பியாவில் நேற்று நடந்த பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் அலெக்சாண்டர் வூசிச்சின் நீண்டகால ஆட்சிக்கு எதிராக மாணவர் இயக்கம் ‘மாணவர் பட்டியல்’ என்ற பெயரில் களமிறங்கி, ஊழல் மற்றும் பொது உள்கட்டமைப்பு திட்டங்களில் வெளிப்படைத்தன்மையின்மை போன்ற பிரச்சினைகளை முன்வைத்துள்ளது.




