ஐரோப்பாவின் சில நாடுகளில் கல்விக்கான நிதி, மலிவு விலையில் வீட்டு வசதி, ஓய்வூதிய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை முன்வைத்து போராட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்தன. சில நகரங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி மோதல் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் பதிவானது.

பிரான்சில் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. பாரிஸ், லியோன், ரென்னெஸ், மார்சேய் உள்ளிட்ட நகரங்களில் பட்டாசுகள், பாட்டில்கள், கற்கள் வீசப்பட்டதால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது; சில இடங்களில் தீவைப்பும் நடந்தது.

இதையடுத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, தண்ணீர் பீச்சியும் கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தேசிய அளவிலான வேலைநிறுத்தங்களை தொடரப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இத்தாலியில் ரோம் நகரில் நடந்த பேரணியின்போது பியாசா டெல்லா ரிபப்ளிகா பகுதியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முக்கிய வணிகப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், கொலோசியம் வளாகத்திற்குள் நுழைய முயன்ற சிலரை போலீசார் தடுத்து வெளியேற்றினர்; டூரினிலும் மோதல் பதிவானது. மிலனில் நடந்த பேரணி பெரும்பாலும் அமைதியாக நடந்ததாக கூறப்படுகிறது.

ஸ்பெயினில் சமூக ஊடக அழைப்பைத் தொடர்ந்து பார்சிலோனாவின் பிளாசா டி கட்டலுானியா பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். கருப்பு முகமூடி அணிந்த சிலர் சாலை தடுப்புகளுக்கும் குப்பைத் தொட்டிகளுக்கும் தீ வைத்ததுடன், கடைகளில் புகுந்து கொள்ளையடித்ததாகவும், போலீசார் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது; 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 25 பேர் சிறுவர்கள். இதன் தாக்கமாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலும் மலிவு வீட்டு வசதி கோரி போராட்டம் நடந்தது; அல்பேனியாவின் திரானாவில் கல்விக் கட்டணம் குறைப்பு மற்றும் கல்வித் துறையில் அரசு முதலீடு அதிகரிப்பு கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாகி அரசு கட்டடங்களுக்கு தீவைப்பு மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.