பெங்களூரு எலஹங்காவில் உள்ள குடும்ப சொத்தான பங்களாவில் திருமணம் நடத்துவது தொடர்பாக, முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“எலஹங்கா பேலஸ்” என அழைக்கப்படும் இந்த சொகுசு வளாகம், முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி எலஹங்காவில் வைத்திருந்த 20 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மறைவதற்கு முன், அந்த இடத்தை ஜெகன் மற்றும் ஷர்மிளாவுக்கு சமமாகப் பிரித்து வழங்கியதாகவும், பின்னர் இருவரும் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனியாக வீடுகள் கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே வளாகத்தில் இருப்பதால் அங்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்தும்போது இருவரின் ஒப்புதல் அவசியம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், சகோதரர்–சகோதரி இடையே சொத்து தொடர்பான தகராறு நடந்து வருவதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.

இந்நிலையில், ஷர்மிளாவின் மகள் அஞ்சலியின் திருமணம் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதை எலஹங்கா பேலசிலேயே நடத்த ஷர்மிளா முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஜெகனிடம் அனுமதி கேட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அவர் மறுத்ததாக தகவல்.

ஆந்திர சட்டசபை தேர்தலில் தோல்விக்குப் பிறகு ஜெகன் பெரும்பாலும் எலஹங்கா பங்களாவிலேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சிக்காக புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பவர்கள், சமையல் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் வருவதால் தன் வீட்டின் படங்கள்/வீடியோக்கள் வெளியேறி குடும்ப பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பொருட்படுத்தாமல், ஷர்மிளா அதே இடத்தில் திருமணத்தை நடத்தத் தயாராகி வருவதாகவும், அழைப்பிதழ்களில் அந்த முகவரியே அச்சிட்டு உறவினர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு வழங்கியுள்ளதாகவும், பாதுகாப்பு பிரச்னை என்றால் திருமண நாளில் வேறு இடத்தில் தங்குமாறு ஜெகனுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.