தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து உரையாற்றினார்.

சமூக மாற்றத்தில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், இளம் வழக்கறிஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்களை கவனிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவித்தார். வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், புதிய வழக்குகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 25 ஆண்டுகளில் கிராமச் சமூக வாழ்க்கை நகர்மயமாக மாறியதால், வழக்குகளின் தன்மையும் மாறியுள்ளதாக நீதிபதி கூறினார். முன்பு கிராமங்களில் அதிகமாக இருந்த சிவில் வழக்குகளுக்கு பதிலாக, வணிகம் மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனைகள், பணம் கொடுத்தல்–வாங்கல் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும், சைபர் குற்றங்கள் மற்றும் திருமணத் தொடர்பான வழக்குகளும் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் வழக்குத் தகவல்கள் மற்றும் தீர்ப்புகளை நிமிடங்களில் பெற முடிவதால், சட்டத்துறையில் எதிர்கால மாற்றங்களை கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர் கூறினார். இதனால் இளம் வழக்கறிஞர்கள் தங்கள் வாதாடும் திறன் மற்றும் சட்ட அறிவை மேம்படுத்தி, தொழில் தர்மத்தை உறுதியாகக் காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நீதியைப் பெற மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே சட்ட அறிவும் வாதத் திறனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், தனிப்பட்ட பிரச்னைகள் அல்லது சொந்த ஆதாயத்திற்காக சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். சட்டத் துறையின் நற்பெயரை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு எனவும் அவர் கூறினார்.