பிரதமர் நரேந்திர மோடியின் தந்தையை குறித்து அவதூறாக பேசியதாக கூறி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது பாட்னாவில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பீஹாரின் பாட்னாவில் முன்னாள் முதல்வர் கிருஷ்ண சிங்கின் 139வது பிறந்த நாள் விழாவில் கார்கே கலந்து கொண்டார். அங்கு அவர், எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள்) தொடர்பாகவும், பிரதமர் மோடியை குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், “பிரதமர் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது” என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் அந்த நபரை தாக்கி வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்கே, “மோடியின் தந்தை வந்தாலும் தோற்கடிக்கப்படுவார்” என்று கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த விவகாரத்தில், பாஜ மாநில காரிய கமிட்டி உறுப்பினர் கிருஷ்ணா சிங் கல்லு, பாட்னா கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முன்னதாக பிரதமரின் தாய் குறித்து அவதூறு பேச்சு சர்ச்சையான நிலையில், இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்ததாக கூறி பாஜ தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.




