பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கீ பாத் மூலம், தீபாவளி உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகைகளுக்கான வாங்குதலில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் உள்ளூர் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் வலுப்படும்; ஏற்றுமதி வாய்ப்புகளும் உருவாகும் என அவர் கூறினார்.

மன் கீ பாத் நிகழ்ச்சி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை குறிப்பிட்ட அவர், இது நாட்டுமக்களின் முயற்சிகளை நெருக்கமாக அறிந்து, பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போகும் பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் பயணமாக இருப்பதாக தெரிவித்தார். பாரம்பரிய திறன்கள் மற்றும் விவசாய முறைகள் நம் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், அவற்றை புதுமையான அணுகுமுறைகளுடன் இணைத்தால் இன்றைய காலத்திற்கேற்ப வளர்த்தெடுக்க முடியும் என்றார்.

உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில் “கேத்தி விராஷத் மிஷன்” அமைப்பு “நவ் திரிஞ்சன்” திட்டத்தின் மூலம் ரசாயனங்கள் இல்லாமல் பருத்தி சாகுபடியை முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார். இயற்கை நிறங்களைக் கொண்ட பருத்தி ரகங்களை பயிரிடுவதால், நுால் மற்றும் துணிகளுக்கு சாயமிடும் ரசாயன பயன்பாட்டையும் தவிர்க்க முடியும் என்றும், பாரம்பரிய நெசவு கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நெசவு பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கர்வால் பகுதியில் வறண்டு கிடந்த ஹெவல் நதியை உள்ளூர் மக்கள் மற்றும் கிராம நிர்வாகம் இணைந்து மீட்டதாக அவர் தெரிவித்தார். மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதவியதாக கூறினார். ஏற்றுமதி தொடர்பாக, பீஹாரின் பூர்னியாவில் விளையும் மக்கானா கிரீஸ் நாட்டுக்கும், கர்நாடகாவின் கலபுரகியில் விளையும் துவரம் பருப்பு மாலத்தீவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக எடுத்துக்காட்டினார்.

ஒரு பொருளின் தரத்துடன் அதன் பாக்கெட் வடிவமைப்பும் முக்கியம் என கூறிய அவர், மஹாராஷ்டிராவில் பழங்குடியினர் “சபரி நேச்சுரல்ஸ்” என்ற பெயரில் தயாரிக்கும் தேன், இலுப்பை சாறு மற்றும் மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களின் பாக்கெட்டுகளில் பாரம்பரிய கலை இடம்பெற்றுள்ளதாக சொன்னார். அந்த வடிவமைப்புக்கு ஜப்பானின் “குட் டிசைன்” விருது கிடைத்ததாகவும், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று கதர் மற்றும் கிராம தொழில் பொருட்களின் விற்பனை ஒரே நாளில் ரூ.28 கோடியை தாண்டி, முந்தைய ஆண்டைவிட அதிகமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் இலவச ஆன்லைன் மருத்துவ சேவையான “இ-சஞ்சீவினி” திட்டம் மூலம் அந்தமானில் நிமோனியா பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31 அன்று நாடு முழுதும் நடைபெறும் “ஒற்றுமை ஓட்டத்தில்” குடும்பத்தினர், நண்பர்களுடன் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும், பண்டிகைகளை பாதுகாப்பாக கொண்டாடி, உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளித்து சுற்றுப்புறத் தூய்மையையும் பேண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.