உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி—தன் லோக்சபா தொகுதி—சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் பிரமாண்ட ரோடு ஷோவும், கங்கை நதிக்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

பயணத்தின் ஒரு பகுதியாக, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அரவிந்த் மில்ஸ் நிறுவனத்துக்குச் சென்ற அவர், புதிய ஆடை உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார். வாரணாசியில் தொழில் முதலீடுகளை உயர்த்தி உற்பத்தித் துறையை வளர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் சாலை மார்க்கமாக கங்கையின் நமோ கரைக்கு சென்றார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், வாகனத்தில் நின்றபடி கையசைத்து அவர் அவர்களை வாழ்த்தினார்.

இந்திய விமானப்படையின் 94வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நமோ கரையில் ‘விங்ஸ் ஓவர் கங்கை’ என்ற பெயரில் வான் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் தேஜஸ் போர் விமானம், இலகு ரக போர் ஹெலிகாப்டர் ‘பிரசாந்த்’, ஐ.எல்.-76, ஐ.எல்.-78, சி-295, ஏ.என்.-32 உள்ளிட்ட விமானங்கள் மற்றும் சுகோய்-30, ரபேல் போன்ற முன்னணி போர் விமானங்கள் இடம்பெற்றன. இந்திய கடற்படை மற்றும் ராணுவ விமானங்களும் பங்கேற்று, முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வெளிப்படுத்தின.