நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக, சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை தொடங்கியதிலிருந்து இடி, மின்னல் தாக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார். மழை தொடர்பான தகவல்களை அரசு தெளிவாக வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் கனமழையால் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியதாக அமைச்சர் கூறினார்.
மேலும், நீலகிரியில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கையாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




