வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை ‘ஆப்பரேஷன் டிரைடென்ட்’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் முறியடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அசாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 38 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளின் முடிவில் 18 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 500 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய ரூ.17.82 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சட்டவிரோத ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதுடன், தொடர்புடைய 1,424 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

விசாரணையில், இந்தியா–மியான்மர்–வங்கதேச எல்லைப் பகுதிகளை இணைக்கும் ‘டெத் ட்ரையாங்கிள் காரிடர்’ என குறிப்பிடப்படும் ஆபத்தான சர்வதேச பாதை வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாக தெரியவந்தது. ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்கள், போதை கடத்தலுக்காக வங்கி கணக்குகளை பயன்படுத்த அனுமதித்தவர்கள், போலி வணிக நிறுவனங்கள் மற்றும் சில வங்கி கிளைகள் தொடர்பாகவும் சோதனை, விசாரணை நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நடவடிக்கை போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் மத்திய அரசின் உறுதியை காட்டுவதாக கூறினார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இதை சர்வதேச கடத்தல் கும்பல்களுக்கு பெரிய பின்னடைவு என குறிப்பிட்டு, ‘போதை இல்லா இந்தியா’ இலக்கை நோக்கி நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்தார்.