வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்கிறது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்ததால் பல மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

இந்த வானிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை, சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததாகவும், சில சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் எதிர்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அக்.26 அன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.