தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மவுனமாக இருப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் குற்றச் சம்பவங்களை முன்வைத்து அவர் அறிக்கை வெளியிட்டார்.
சென்னையில் வெளியிட்ட அந்த அறிக்கையில், பட்டப்பகலில் வெட்டவெளியில் கொலைகள் நடைபெறுவதாகவும், சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செஞ்சியிலிருந்து காணாமல் போன சிறுமி எங்கே என்பது இன்னும் மர்மமாகவே இருப்பதாக கூறிய ஸ்டாலின், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார். குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமும் கொலைகளை எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்து நீண்ட நேரம் பேசுவதில் வல்லவரான முதல்வர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை என கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.




