தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் தீவிரம் அதிகரித்த பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, தேனி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்தனர். இதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் நெல்லை இடம்பெறவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சில மாணவர்கள், இன்ஸ்டா மூலம் மாவட்ட ஆட்சியருக்கு மெசேஜ்கள் அனுப்பி மழைக்காக லீவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், அந்த மெசேஜ்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, அதை ‘ரெயின் பரிதாபங்கள்’ என குறிப்பிட்டார். இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகனும் மாணவர்களின் ஜாலியான மெசேஜ்களை ‘ரெய்னி டேய்ஸ் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.