தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நீலகிரியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை சாத்தியத்தை முன்னிட்டு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல் பகுதிகளில் இன்று கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்று இரவு 8.30 மணி வரை பதிவான மழைப்பொழிவில் கோவை ஒத்தக்கால் மண்டபம் 15.2 செ.மீ., திருப்பூர் காரத்தொழுவு 13.1 செ.மீ. என அதிகமாக பதிவானது. ஈரோடு மடத்துப்பாளையம் 11.0 செ.மீ., திருப்பூர் நல்லாம்பாளையம் 10.6 செ.மீ. உள்ளிட்ட பல இடங்களில் 5 முதல் 9 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.