கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் யூனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகள் அபாரமாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2016-17ம் ஆண்டிலிருந்து யுபிஐ பரிவர்த்தனை அளவு சுமார் 13,000 மடங்கு வளர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது யுபிஐ மூலம் மாதத்திற்கு 2,400 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்றும், நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 80 கோடி பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்றும் தெரிவித்தார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ‘ரியல்-டைம்’ கட்டண அமைப்பாக யுபிஐ உருவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த அமைப்பு பயனர்களுக்கு கடன், காப்பீடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் போன்ற நிதி சேவைகளை அணுகும் பாதையையும் உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

டிஜிட்டல் யுகத்தில் தரவு மையங்கள் பாதுகாப்புப் பெட்டகமாக செயல்படுகின்றன என்றும், 2022ல் தரவு மையங்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார். 2026-27 மத்திய பட்ஜெட்டில், இந்திய தரவு மையங்களிலிருந்து உலகளாவிய ‘கிளவுட்’ சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரிசர்வ் வங்கியின் புதிய தரவு மையத்தையும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தையும் திறந்து வைத்தார். இந்த மையம் பணப்பரிவர்த்தனை உள்கட்டமைப்புக்கான இந்தியாவின் உள்நாட்டுத் திறனை வலுப்படுத்தும் என்றும், ஆர்பிஐயின் முக்கிய சேவை அமைப்புகளான ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெப்ட் (NEFT) இங்கு செயல்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.