ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா குமாரி, கணவரை இழந்த பின்னர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். மாமனார், மாமியார் மற்றும் இரு குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அவர்மீது இருப்பதால், குடும்பத்தை நடத்த ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, சிதோ கன்ஹூ மாவட்ட மைதானத்தில் ஒரு அகாடமி நடத்திய பயிற்சி ஓட்டத்தில் அவர் பங்கேற்றார். டிராக் சூட், காலணி எதுவுமின்றி வெறும் காலில் ஓடிய அவரது புகைப்படம், வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது; இதைப் பார்த்த பலரும் உதவ முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ராம்கர் மாவட்டத்தில் நடந்த ஊர்க்காவல் தேர்வில் 1,600 மீட்டர் ஓட்டம் நடத்தப்பட்டது. 10 நிமிடங்களில் தூரத்தை முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கவிதா 8 நிமிடம் 57 விநாடிகளில் ஓடி அந்த கட்டத்தைத் தாண்டினார்.

ஆனால் அடுத்த கட்டமான உயரம் தாண்டுதலில், மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டும் அவர் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட முடியவில்லை. இதனால் தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது; ஊர்க்காவல் படையில் சேரும் அவரது கனவு இந்த முறையும் நிறைவேறவில்லை.

சோகத்துடன் அவர் வெளியேறியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.