தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆவின் பல பால் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலை அக்.28 முதல் அமலுக்கு வருகிறது.

பால் கொள்முதல் செய்து தயிர், நெய், வெண்ணெய், பிஸ்கட், பால்கோவா, குளிர்பானங்கள், முறுக்கு உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஆவின், மூலப்பொருட்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் பிற செலவினங்கள் அதிகரித்ததே காரணம் என தெரிவித்துள்ளது.

முக்கிய மாற்றங்களில், 100 கிராம் ஆவின் நெய் பாட்டில் ரூ.10 உயர்ந்து ரூ.95 ஆகியுள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்ந்து ரூ.770 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.30 உயர்ந்து ரூ.390 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது: 100 கிராம் வெண்ணெய் ரூ.10 உயர்ந்து ரூ.70 ஆகவும், அரை கிலோ வெண்ணெய் ரூ.45 உயர்ந்து ரூ.320 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இனிப்புகளில் 100 கிராம் ரசகுல்லா ரூ.5 உயர்ந்து ரூ.50 ஆகவும், 200 கிராம் ரசகுல்லா ரூ.90 இலிருந்து ரூ.95 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும், கால் கிலோ குலோப்ஜாமுன் ரூ.15 உயர்ந்து ரூ.115 ஆகவும், கால் கிலோ பால்கோவா ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆகவும், கால் கிலோ மைசூர்பாக் ரூ.20 உயர்ந்து ரூ.160 ஆகவும், 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.3 உயர்ந்து ரூ.23 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.