சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் கட்டுமான அனுமதிகள் வழங்கும் செயல்முறையில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், தி.மு.க.வைச் சேர்ந்த பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் கைது செய்துள்ளனர். தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளங்கோவன் என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அங்கீகாரம் வழங்குதல் மற்றும் அனுமதிகள் பெறுவதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், விசாரணை விரிவடைந்து பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

போலீசார் தகவலின்படி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் தி.மு.க. செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவருமான பி.டி. அரசகுமார் ஜூன் 27 அன்று கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் உள்ளிட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர். 177 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் லஞ்சம் வாங்கியதாக கண்டறியப்பட்டதாக கூறி, வீடுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் டி.பி.ஐ. வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தி ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சென்னை மற்றும் திருச்சியில் மகேஷுக்கு தொடர்புடைய நான்கு இடங்களிலும், அவரது உதவியாளர் வாளாடி கார்த்திக் உள்ளிட்டோரின் வீடு/அலுவலகங்களிலும் சோதனை நடத்தி மடிக்கணினி உள்ளிட்ட ‘டிஜிட்டல்’ பதிவுகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் கூறினர். சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து மகேஷ் ஆஜராகி சுமார் எட்டு மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மகேஷை போலீசார் கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தனர். பின்னர் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நவம்பர் 6 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.