புதுடில்லி: இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசும் இந்திய ராணுவமும் இதை திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.

இந்த சூழலில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரிது சவுத்ரி சமூக ஊடகத்தில் இரண்டு வீடியோக்களை பகிர்ந்து, இந்திய பகுதிகளில் சீனா ஊடுருவி ஆக்கிரமித்துவிட்டதாக கூறினார்.

முதல் வீடியோ குறித்து ராணுவம் விளக்கம் அளித்தது. அதில் காணப்படும் வாகனங்கள் சிக்கிமில் உள்ள நாதுலா பாஸ் வழியாக செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக பாதையில் இயங்கும் வணிக வாகனங்கள் என்றும், அதை சீன ராணுவ ஊடுருவலாக தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் தெரிவித்தது.

இரண்டாவது வீடியோவில் கிரிஷ் காலியா என்ற ராணுவ அதிகாரி அருணாச்சலில் சீனா ஆக்கிரமித்ததாக கூறுவது போல காட்சி இடம்பெற்றிருந்தது. இதை ஆய்வு செய்த ராணுவம், அந்த வீடியோ 2023 அக்டோபர் 27-ல் ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்டதாகவும், அதை டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் மாற்றி வெளியிட்டதாகவும் கூறியது. மேலும், அருணாச்சல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்ததாகவோ அல்லது இந்திய ராணுவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவோ அந்த அதிகாரி கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய ராணுவத்தின் பிம்பத்தை கெடுக்கும் முயற்சி நடக்கிறது என்றும், ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோவை காங்கிரஸ் பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார். இதற்காக காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.