மஹாராஷ்டிராவின் பிவண்டியில் இயங்கி வந்த பிளிங்கிட் சேமிப்பு கிடங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விதிமீறலாக பதுக்கி வைக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கிடங்கின் உரிமத்தை மாநில உணவுப் பாதுகாப்புத்துறை ரத்து செய்துள்ளது.
அதிரடி சோதனையில், விற்பனைக்குத் தகுதியற்ற 18,405 உணவுப் பொருட்கள் கிடங்கில் இருப்பது தெரியவந்தது. இதில் காலாவதியானதும், சேதமடைந்ததும் அடங்கும்; மொத்த மதிப்பு ரூ.32.71 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி காலாவதியான பொருட்களை முறையாக அழிக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கிடங்கு உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவ்வகை காலாவதியான பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடியும் வரை கிடங்கில் உள்ள பொருட்களை வேறு இடத்துக்கு மாற்ற கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, உணவுப் பாதுகாப்புத்துறை கமிஷனராக உள்ள துக்காராம் முண்டே ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைபெறும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இதேபோல் ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் கிடங்குகளில் நடந்த ஆய்வுகளிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




