நுாறு சதவீதம் வரை எத்தனால் கொண்ட ‘E100’ எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
அதிக எத்தனால் கலப்பு எரிபொருளுக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு, உரிய சான்றிதழ் பெற்ற வாகனங்களுக்கே இந்த அனுமதி பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ‘E20’ (20% எத்தனால், 80% பெட்ரோல்) அல்லது வழக்கமான பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் ‘E85’ அல்லது ‘E100’ பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டது.
இதனுடன், வாகனங்களின் வகைப்பாடு, எரிபொருள் தரநிலைகள், மாசு உமிழ்வு சோதனை உள்ளிட்ட தொழில்நுட்ப விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை அதிகரித்து, வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். தற்போது ‘E20’ பெட்ரோல் நாடுமுழுதும் அமலில் உள்ளது.
சாதாரண பெட்ரோல் வாகனங்களை விட, ‘பிளெக்ஸ்-ஃப்யூல்’ வாகனங்கள் பல்வேறு கலப்புகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன; இதில் ‘E85’, ‘E100’ போன்ற அதிக எத்தனால் கலப்பு எரிபொருள்களும் அடங்கும். கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் ‘E20’ முதல் ‘E100’ வரை இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்திய நிலையில், டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனங்களும் இதுபோன்ற மாடல்களை உருவாக்கி வருகின்றன.




